
அரசாங்கம் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியவாறு மேலும் தாமதிக்காது மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும. மாகாணசபைத் தேர்தலை மேலும் தாமதிக்காமல் நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்மானமொன்றை மேற்கொண்டு, தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதியையும் தெளிவான செயற்பாட்டுத் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தானத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (22) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ளது. மக்கள் வாக்குரிமையின் மூலம் தெரிவுசெய்த பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மாகாணசபைகள் தற்போது ஆளுநர்களின் கீழ் இயங்கி வருகின்றன. தேர்தலை நடத்துவது தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல் அது அரசியல் தீர்மானமாகும். அரசாங்கம் அரசியல் தீர்மானம் எடுத்தால் தேவையான சட்டத் திருத்தங்களை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள முடியும்.
2024 ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' தேர்தல் கொள்கை அறிக்கையில், பிற்போடப்பட்டுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒரு வருடத்துக்குள் நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. 2025 மே மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், மாகாணசபைத் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே அரசாங்கம் மேலும் தாமதிக்காது மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
கடந்த மே 26 ஆம் திகதி பெப்ரல் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் நடத்திய கலந்துரையாடலில், 2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்துக்கு முன்னர் நடைமுறையிலிருந்த தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானம் கிடைக்கும் வரை இந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கும், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை தன்னார்வ அடிப்படையில் உறுதிப்படுத்துவதற்கும் இணக்கம் ஏற்பட்டது.
அதேபோன்று, தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடியாத எந்தவொரு தகுதியுடைய வாக்காளரின் வாக்குரிமையும் மறுக்கப்படக் கூடாது. தொழில், சுகாதாரம், தடுத்து வைக்கப்பட்டிருத்தல் அல்லது கடமைப் பொறுப்புகள் உள்ளிட்ட காரணங்களால் வாக்களிக்க முடியாதவர்களுக்காக மாற்று வாக்களிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
தபால் மூல வாக்களிப்பு, முற்கூட்டியே வாக்களித்தல், மாற்று வாக்களிப்பு நிலையங்கள், நடமாடும் வாக்களிப்பு வசதிகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குதல் ஆகிய ஐந்து முன்மொழிவுகள் தொடர்பில் 23 அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நாம் ஆய்வு செய்துள்ளோம். இதில் 22 கட்சிகள், அதாவது 96 வீதமான கட்சிகள், தபால் மூல வாக்களிப்பு வசதியை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் 2025 செப்டெம்பர் 15 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மூலம் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்வந்துள்ளதை நாம் வரவேற்கிறோம். இந்த உறுதிமொழிகளை சட்ட ஏற்பாடுகளாக மாற்ற வேண்டும்.
எனவே, மாகாணசபைத் தேர்தலுக்குத் தேவையான சட்டத் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு, முதற்கட்டமாக தபால் மூல வாக்களிப்பு வசதியை விரிவுபடுத்துவதுடன், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் முற்கூட்டியே வாக்களித்தல் மற்றும் மாற்று வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தகுதியுடைய எந்தவொரு பிரஜைக்கும் அவர் பணியாற்றும் இடம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் அல்லது வசிக்கும் இடம் காரணமாக வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது. மாகாணசபைத் தேர்தலில் இந்த மாற்று வாக்களிப்பு முறைகளை முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், அவற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்னர் பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சாத்தியங்களை மதிப்பீடு செய்ய முடியும் என்றார்.












