
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் -04 தொலைக்காட்சியில் குறிப்பிடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதை போன்று வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளால் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலத்துக்கு அமையவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்ததைத் தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சத்துருக்கொண்டான் படுகொலை 36 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. இந்த படுகொலை தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த படுகொலை குறித்து குழந்தை வடிவேல் என்பவர் கடந்த ஆண்டு பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.இராணுவ அதிகாரியான வர்ண குலசூரிய என்பவர் சத்துருக்கொண்டான் படுகொலையின் பின்னணியில் இருப்பதாக அவர் முறைப்பாடளித்துள்ளார்.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரியான வர்ண குலசூரிய தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காமல்,முறைப்பாடளித்த குழந்தை வடிவேல் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏன் வர்ண குலசூரியவை இதுவரையில் விசாரணைக்கு அழைக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா என்பவர் செனல் -04 தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலுக்கு அமைவாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் யுத்தத்திலும்இ அதற்கு பிற்பட்ட காலங்களிலும் படுகொலை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை குமுதுனி படகு படுகொலை,வந்தாறுமூலை படுகொலை என பல படுகொலைகளை குறிப்பிட்டுக் கொண்டுச் செல்லலாம்,ஆனால் இவற்றுக்கு இதுவரையில் எந்த அரசாங்கமும் நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை.கடந்தகால படுகொலைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம் என்றார்.












