“காவி உடையைக் கழற்றினாலும் நான் ஞானசார தேரர் தான்” – ஞானசார தேரர்


எனது காவி உடையை கழற்றினாலும் நான் ஞானசார தேரர் தான். காவி உடை தொடர்பில் மகா சங்க சபை எடுக்கும் தீர்மானம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து அவர் மீண்டும் சிறைச்சாலை வாகனத்திற்கு அருகில் வருகைதந்தபோது ஊடகவியலாளர்களால் அவருடைய காவி உடை சம்பந்தமாக கேள்வி எழுப்பபட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எதற்கும் முகங்கொடுக்க தயாராகியே வேலைகளைச் செய்தோம். நாட்டுக்காவே எமது வேலைகளைச் செய்தோம். அகவே எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. எனக்கு கவலையும் இல்லை. எனது காவி உடை சம்பந்தமாக மகா சங்க சபை எடுக்கும் தீர்மானம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காவி உடையைக் கழற்றினாலும் ஞானசாரதேரர் ஞானசார தேரர் தான் என்றார்.