
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் ரயான் எயார் (Ryanair) விமான நிறுவன ஊழியர்கள் பாகுபாடான முறையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டப்ளின் விமான நிலையத்திலிருந்து பிரிஸ்டல் நோக்கிப் பயணிக்கத் தயாரானபோது, ரயான்எயார் நிறுவனத்தின் விமான நுழைவாயில் ஊழியர்களின் அணுகுமுறை, அச்சுறுத்தும் தொனி மற்றும் தவறான நடைமுறைகள் அதிர்ச்சியளித்ததாக சங்கக்கார தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “உங்களைப் போன்ற கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் இத்தகைய நடத்தையைத்தான் எதிர்பார்க்க வேண்டும்” என ஊழியர்கள் தெரிவித்ததாகவும், இது தெளிவான இனவாத நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ள ரயான்எயார் நிறுவனம், கட்டாயக் குடிவரவு ஆவணப் பரிசோதனையின்போது சங்கக்கார ஆரம்பத்தில் தேவையான விசா ஆவணங்களைச் சமர்ப்பிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது.
எனினும், ஆவணப் பரிசோதனைகள் நிறைவடைந்து அவரது பயணத் தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், கடந்த 28ஆம் திகதி திட்டமிட்டபடி டப்ளினிலிருந்து பிரிஸ்டல் செல்லும் விமானத்தில் பயணிக்க அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.








.jpg)



