
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரது எதிர்ப்பையும் மீறி காவி ஆடை பலவந்தமாகக் களையப்பட்டு சிறைச்சாலை சீருடை அணிவிக்கப்பட்டதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கறுப்பு நிற ஆடை அணிந்து கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி ஞானசார தேரரின் வேண்டுகோளுக்கிணங்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்ததாகவும், அப்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து தேரர் தம்மிடம் விளக்கியதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டிலும் ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை அணிவிக்க அதிகாரிகள் முயற்சித்ததாகவும், அப்போது அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இம்முறை பல சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றிணைந்து, தேரரின் எதிர்ப்பையும் மீறி அவருக்கு சிறைச்சாலை சீருடையை பலவந்தமாக அணிவித்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சம்பவத்தின்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் கமராவை இயக்கி, வேறொரு இடத்தில் இருந்த நபருக்கு சம்பவத்தை நேரடியாகக் காண்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் செல்வாக்குமிக்க நபர் ஒருவர் சம்பவத்தை அவதானித்திருக்கலாம் அல்லது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டிருக்கலாம் என்றும் கம்மன்பில சந்தேகம் வெளியிட்டார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டத் தலைவர்களின் அழுத்தம் காரணமாகவே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை அணிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தேரரும் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், உயர்மட்ட அழுத்தங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தின்போது ஞானசார தேரர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், அவரது துறவற உள்ளாடையை அகற்ற முயன்றபோது அதனை மேல்நோக்கி வீசியதில், அது சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியில் சிக்கியதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் உயர்மட்ட அதிகாரிகளின் அழுத்தம் இருந்ததாகத் தாம் நம்புவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.












