தலதா மாளிகை மீது ஜே.வி.பியினர் குண்டுத்தாக்குதல் நடத்தவில்லை – எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளிடம் மகாநாயக்க தேரர் விளக்கம்!



ஜனநாயக தேசிய முன்னணி (ஜே.வி.பி) ஸ்ரீ தலதா மாளிகை மீது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குண்டுத் தாக்குதல் நடத்தவில்லை என்றும், அத்தாக்குதலை எல்.டி.டி.ஈ அமைப்பே நடத்தியது என்றும் மல்வத்து விஹாரையின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகயவின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (12) மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜே.வி.பியினர் தலதா மாளிகை மீதும் குண்டுவீச்சு நடத்தினர் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்ட கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே மகாநாயக்க தேரர் இந்த விளக்கத்தை அளித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, ஜே.சீ. அலவத்துவல, சுஜீவ சேனசிங்க, கின்ஸ் நெல்சன், சமிந்திராணி கிரியெல்ல உள்ளிட்ட குழுவினர் மகாநாயக்க தேரரைச் சந்தித்து, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமை உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது, சங்க சபை மற்றும் பிக்குகளின் மத உரிமைகள் தொடர்பான தீர்மானங்களை மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான காரக சங்க சபையே எடுக்கவேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் மகா சங்கத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர், சமூக வலைத்தளங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல எனக் குறிப்பிட்டதுடன், அரசாங்கமே இவ்வாறான செயல்களைச் செய்கிறது என உறுதியாகக் கூற முடியாது என்றும், கட்சி அரசியல் சாராத நபர்களும் இவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், நாட்டை மதச் சார்பற்றதாக மாற்ற முயல்வதாகவும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். இருப்பினும், அரசாங்கம் பௌத்த மத நிகழ்வுகளைத் தடை செய்யவில்லை என்றும், ஏனைய மத நிகழ்வுகளிலும் பங்கேற்று வருவதாகவும் மகாநாயக்க தேரர் தெளிவுபடுத்தினார்.

தலதா மாளிகையின் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றபோதிலும், ஜே.வி.பியினர் குண்டுத்தாக்குதல்களை நடத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய தேரர், மாளிகையின் பொன்னாலான பேழை தொடர்பில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய் என்றும், புனிதப் பொருட்கள் முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகயவின் பிரதிநிதிகள் குழு அஸ்கிரி பார்சுவையின் மகாநாயக்க வண. வராகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடியது.