
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்குச் செய்த அழிவுகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகளைக் கண்டவுடன் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக்கூடாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
மொனராகலையில் இன்று (4) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீரழித்தது. அரச வளங்களையும் நாட்டின் பணத்தையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் ஊழல் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தனர். இதன் மூலம் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாறியபோதிலும், பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
வறிய மக்களுக்கு சிறிய உதவிகளை வழங்கி அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரமாக இருந்தது. தகரத் தகடுகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், இவ்வாறான உதவிகள் மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
நானும் ஒரு காலத்தில் இந்த அரசியல் முறைக்குள் இருந்தேன். ஆனால், அங்கு நிலவிய ஊழல் நிறைந்த கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அதிலிருந்து விலகினேன். இப்போது அந்த அரசியல் கலாசாரத்தை நிராகரிக்கும் சக்தியொன்று ஆட்சிக்கு வந்துள்ளது. இதனை நாம் சாதகமான மாற்றமாகக் கருத வேண்டும்.
கடந்த காலங்களில் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். மின்வெட்டு, அதிகரித்த மின்சாரக் கட்டணம், வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிச்சுமை மற்றும் மருந்துப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாயத் துறையில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களினால் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்ததுடன், வேலைவாய்ப்புகளும் குறைந்தன.
இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுதல், வாகனம் வாங்குதல், வீடமைத்தல் போன்ற தங்களது அடிப்படைக் கனவுகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணமான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இடம்பெற்ற சம்பவமொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விளக்கமறியலில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்துக்கு வந்தார்.
ஒரு நாள் பாராளுமன்றத்தில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த அமைச்சர்களில் ஒருவர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவைப் பார்த்து, 'நீங்கள் இவ்வாறு எங்களைக் கத்தித் திட்டினாலும், நான் உங்களுக்கு பிரியாணியும் ப்ரைட் ரைசும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தேனே என்று கூறினார்.
இந்தச் சம்பவம், அரசியலில் எதிரெதிர் தரப்புகளில் இருப்பவர்கள் எனக் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் தனிப்பட்ட தொடர்புகளும் பரஸ்பர உதவிகளும் எவ்வாறு காணப்பட்டன என்பதை வெளிப்படுத்துகின்றது.
எனவே, கடந்த கால ஊழல் அரசியலின் விளைவுகளை மக்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகள் தென்படுவதற்காக நாட்டை அழித்த பழைய அரசியல்வாதிகளிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் எனச் சிந்திக்கக்கூடாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுடன், ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரச வளங்களைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றார்.








.jpg)



