அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஊவாவில் கடும் மின்னல் தாக்க அபாயம் – அம்பர் எச்சரிக்கை!



ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (25) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30க்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடும் மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளும் வகையில் பொது மக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக தங்கியிருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட திறந்தவெளிப் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின்சார இணைப்புடன் கூடிய மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அவசர உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.