
வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 15 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பொலன்னறுவை கலஹாக்கலை பகுதியில் புதிய யானைகள் காப்பகம் ஒன்றை ஸ்தாபிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மனித - யானை மோதல்கள் வெள்ளப்பெருக்கு மற்றும் ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களால் தாயைப் பிரிந்த அல்லது காயமடைந்த யானைக்குட்டிகளின் உயிரைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கால்நடை மருத்துவர்கள் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழுவின் ஆய்வின் பின்னரே கலஹாக்கலை பகுதி இந்தக் காப்பகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உடவளவவில் மட்டுமே ஒரேயொரு யானைகள் காப்பகம் இயங்கி வருகிறது. வட மற்றும் வட மத்திய மாகாணங்களில் இருந்து காயமடைந்த யானைக்குட்டிகளை உடவலவவுக்குக் கொண்டு செல்ல 7 முதல் 9 மணித்தியாலங்கள் ஆவதால் நீண்ட தூரப் பயணம் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
இந்த புதிய யானைகள் காப்பகம் அமைவதன் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஊக்கமடைவதுடன் யானைக் குட்டிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் மூலம் உள்நாட்டு மக்களுக்கும் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.









.jpg)


