சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்துவோம்! – ஜனாதிபதி அநுர உறுதி!


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாக்கியத்திற்கு உயிரூட்டும் வேலைத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று சனிக்கிழமை (31) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

"சட்டம் மீது நம்பிக்கை இழந்த சமூகத்தில் சட்டம் தொடர்பான நம்பிக்கையளித்து, சட்டம் தொடர்பான பொறுப்புணர்வைக் கட்டியெழுப்புவோம்.

ரூவன்வெலிசாய விகாரையை இந்த அரசாங்கம் மூழ்கடிப்பதாகச் சிலர் கூறுவது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது. எமது அரசாங்கத்தின் கொள்கைகள் அவர்களின் அரசியல் இலாபத்தைப் பாதிப்பதாக இருப்பதால் தான், இவ்வாறான சூழ்ச்சிகளைச் செய்து மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.

மண்ணால் ஆன சூனிய பொம்மைகளைச் செய்து அதில் முட்களைக் குத்தினால், அது எனது உடம்பில் முட்களைக் குத்துவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். மறுபுறம் பாம்புக்கோலைச் சுமந்து செல்வது என இவர்களின் மனநிலை இவ்வாறு உள்ளது. இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் எவ்வாறான அராஜக நிலையை ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது" என மேலும் தெரிவித்தார்.