வடக்கு, கிழக்கு ஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ என வரவேற்க அறிவுறுத்துவோம் – சாணக்கியனின் கோரிக்கையை ஏற்றார் அமைச்சர் விஜித்த ஹேரத்



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் போது அவர்கள் தமிழ் மொழியில் 'வணக்கம்' என்று குறிப்பிட்டு வரவேற்கப்படுவார்கள். இது ஒரு வழக்கமாகவே ஆரம்பத்தில் இருந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அண்மைகாலமாக அந்த கலாசாரம் மாற்றப்பட்டு 'ஆயுபோவன்' என்று சிங்கள மொழியில் குறிப்பிடப்படுகிறது. மாகாண அடிப்படையிலான கலாசாரங்களை பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், ஆயுபோவன் என்று குறிப்பிடுவதை போன்று வணக்கம் என்று குறிப்பிடுவதும் நல்லதே, அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். குறித்த இடங்களில் வணக்கம் என்று குறிப்பிட அறிவுறுத்துகிறோம். காலை வணக்கம், மாலை வணக்கம் என்று குறிப்பிடுவோம். அது நல்லதே. எனக்கும் அதுவே விருப்பம் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வருமாறு கேள்விகளை முன்வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அச்சுறுத்தலான தன்மையில் காணப்படுகிறது. 2018 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டிற்கும், சுற்றுலாப் பயணிகளின் வருகை,சராசரி தங்கும் காலம், சராசரி நாளாந்த செலவினம் மற்றும் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருவாய் ஆகியவற்றை,செய்யப்பட்ட அனைத்து திருத்தங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களை அடையாளப்படுத்தி அரசாங்கம் சமர்ப்பிக்குமா?

2018 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மேம்பாட்டுச் செலவினங்களின் மாவட்ட ரீதியிலான விபரங்களை,ஒதுக்கப்பட்ட மற்றும் உண்மையாகச் செலவழிக்கப்பட்ட தொகைகள்,திட்டங்கள் மற்றும் அமல்படுத்தும் முகவர் அமைப்புகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா வணிகங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வசதிகளுடன் ஒப்பிடுகையில் தொல்பொருள் தளங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் வழங்குவாரா?

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தங்குமிட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, அவற்றில் எத்தனை இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்கான அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன அல்லது உரிமம் பெற்றுள்ளன? மற்றும் 2018 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டிலும் எத்தனை நிறுவனங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்து சுற்றுலா மேம்பாட்டு வரியைச் செலுத்தியுள்ளன?

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் அறைகளின் கொள்ளளவு, வருடாந்த வருவாய், பொருந்தக்கூடிய வரி விகிதம்,செலுத்த வேண்டிய தொகை, செலுத்தப்பட்ட தொகை, நிலுவையில் உள்ள பாக்கிகள் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசாங்கம் சமர்ப்பிக்குமா?

புதிய சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கு அல்லது ஹோட்டல் மேம்பாட்டிற்கு மேலும் அரசு நிலங்களை ஒதுக்குவதற்கு முன்,உள்ளூர் வேலைவாய்ப்பு, உள்ளூர் கொள்முதல் மற்றும் சமூக நலன்கள் குறித்த அமல்படுத்தக்கூடிய தேவைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துமா, மேலும் இணக்கம் குறித்த வருடாந்திர மாவட்ட ரீதியிலான தகவல்களை வெளியிடுமா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் போது அவர்கள் தமிழ் மொழியில் ' வணக்கம்' என்று வரவேற்கப்படுவார்கள்.இது ஒரு வழக்கமாகவே ஆரம்பத்தில் இருந்து காணப்பட்டது.ஆனால் தற்போது அண்மைகாலமாக அந்த கலாசாரம் மாற்றப்பட்டு ' ஆயுபோவன்' என்று சிங்கள மொழியில் குறிப்பிடப்படுகிறது. மாகாண அடிப்படையிலான கலாசாரங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுலா அபிவிருத்தியின் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானத்தில் ஒரு சதவீதம் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதேச சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான தன்மை கிடையாது. ஹோட்டல்கள் வருமானத்தின் ஒருபகுதியை பிரதேச சபைகளுக்கு செலுத்துவில்லை. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்,

ஆயுபோவன் என்று குறிப்பிடுவதை போன்று வணக்கம் என்று குறிப்பிடுவதும் நல்லதே , அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.குறித்த இடங்களில் வணக்கம் என்று குறிப்பிட அறிவுறுத்துகிறோம்.காலை வணக்கம், மாலை வணக்கம் என்று குறிப்பிடுவோம்.அது நல்லதே. எனக்கும் அதுவே விருப்பம் என்றார்.