
இணையவழித் தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் ஊடாகப் பரிச்சயமில்லாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான ஊடாடல்கள் மூலம் நிதி மோசடிகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நட்பு, காதல் அல்லது திருமணம் என்ற போர்வையில் மோசடி நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தந்திரோபாயங்களை பயன்படுத்தி நம்பிக்கையைப் பெற்ற பின்னர் அவர்களை நிதி ரீதியாக சுரண்டுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக முகநூல், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் ஊடாகத் தொடர்புக் கொள்ளும் இவர்கள் பாலியல் சேவைகள் அல்லது தொடர்புகளை வழங்குவதாக கூறி அறிமுகமில்லாத தொலைபேசி செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மோசடியாளர்கள், டேட்டிங் செயலிகள் போல வடிவமைக்கப்பட்ட தீங்கு விளைவிக்கும் செயலிகளின் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென வற்புறுத்துகின்றனர். இந்த தீங்கு விளைவிக்கும் செயலிகள் மூலம் தொலைபேசியின் தகவல்கள் திருடப்படுவதுடன் இணைய வழிச்செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வங்கிக் கணக்குகளில் உள்ள பணமும் திருடப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்கள் மூலம் எத்தகைய செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாமென பொதுமக்களை அறிவுறுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கிக் கணக்கு விபரங்கள் கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை எவருக்கும் வழங்க வேண்டாம் எனவும் அந்நியர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சரிபார்க்கப்படாத நபர்களின் கோரிக்கைக்கு இணங்க பணப் பரிமாற்றங்களை செய்வதைத் தவிர்ப்பதுடன் இது போன்ற மோசடிகளில் சிக்கினால் உடனடியாக உங்களது வங்கியைத் தொடர்புக் கொண்டு பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்குமாறும் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.









.jpg)


