இலங்கையிலிருந்து யானை இலத்தியால் தயாரிக்கப்பட்ட நினைவுப் பொருட்களை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டுசெல்ல முயன்ற பயணி தடுத்து நிறுத்தம்



இலங்கையிலிருந்து யானை இலத்தியினால் தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி கதவுகளில் ஒட்டப்படும் நினைவுப் பொருட்களை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டுசெல்ல முயன்ற பயணி ஒருவர், அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிரியற் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யானை இலத்தியினால் தயாரிக்கப்பட்ட இந்த நினைவுப் பொருட்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்ததும், குறித்த பயணி அவற்றை அதிகாரிகளிடம் தாமாக முன்வந்து அறிவித்துள்ளார்.

விலங்குகளின் கழிவுப் பொருட்கள் மூலம் தீங்கு விளைவிக்கும் பற்றிரீயாக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சிகளின் லார்வாக்கள் மற்றும் களை விதைகள் பரவக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவை கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், ஆக்கிரமிப்புத் தாவரங்கள் நாட்டுக்குள் அறிமுகமாவதற்கும் வழிவகுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பொருட்களாக விற்பனை செய்யப்பட்டாலும், உயிரியற் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக இத்தகைய தயாரிப்புகளை அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவர அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனை அடுத்து, விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, குறித்த பயணி அந்தப் பொருட்களைத் தாமாக முன்வந்து அகற்றியுள்ளார்.

வெளிநாடுகளில் வாங்கப்படும் அனைத்து நினைவுப் பொருட்களையும் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவர அனுமதி கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், விலங்கு சார்ந்த பொருட்களைக் கொண்டுவருவதற்கு முன்பாக அந்நாட்டின் உயிரியற் பாதுகாப்பு இறக்குமதி விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.