யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்து பிரித்தானியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியதில் ஊழல் புரிந்ததாகக் குற்றச்சாட்டு



2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், யோஷித ராஜபக்‌ஷவை கடற்படையில் நிறைவேற்று உத்தியோகத்தராகச் சேர்த்துக்கொண்டு, பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி விசேட பாடநெறிக்காக அரச பணத்தில் அவரை அனுப்பி வைத்ததன் மூலம் "ஊழல்" புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மேலதிக பூர்வாங்க வழக்கு விசாரணைகளுக்காக (Pre-trial Conference) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று (13) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்களால் கோரப்பட்ட ஆவணங்களில் ஒரு பகுதி மட்டுமே தமக்குக் கிடைத்துள்ளதாகவும், ஏனைய ஆவணங்கள் முறைப்பாட்டாளரால் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளால் கோரப்பட்ட ஆவணங்கள் காணப்படுமாயின், அவற்றை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை பூர்வாங்க விசாரணைக்காக மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் நிறைவேற்று உத்தியோகத்தராக இணைந்துகொள்வதற்குரிய உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்‌ஷவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி விசேட பாடநெறிக்காக அரச பணத்தில் அவரை அனுப்பி வைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தி ஊழல் புரிந்ததாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.