ஜனாதிபதி உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமம் – ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை - பிரதி அமைச்சர் தெரிவிப்பு!



நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி உட்பட எவராயினும் சட்டத்தின் கோட்டிற்கு கீழேயே இருக்க வேண்டும். அந்த வகையில் எமது அரசாங்கத்துக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை(09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது அவருடைய பின்னணி, பதவி அல்லது நபர் யார் என்பது எமக்கு முக்கியமல்ல. அவருக்குத் தேவையான தகுந்த சிகிச்சைகள் உரிய நேரத்தில் பாகுபாடின்றி வழங்கப்படும். குறித்த நோயாளி சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டாரா அல்லது வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டாரா என்பது மருத்துவ சிகிச்சையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ராஜபக்‌ஷ குடும்பத்தினரைப் பழிவாங்குவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம். பழிவாங்கும் நோக்கம் இருந்திருந்தால் கடந்த காலங்களிலேயே அதைச் செய்திருக்க முடியும். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பே அரசாங்கத்துக்கு உள்ளது. பழிவாங்கும் அரசியல் எமது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

அரசியல்வாதிகள், மதகுருமார்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் அல்லது ஜனாதிபதி என எவராக இருந்தாலும் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்களே. சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அதனை பாராளுமன்றத்தின் மூலமே மேற்கொள்ள முடியும். மேலும், நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னர் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டதே தவிர, அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம் அல்ல.

இந்த அரசாங்கம் அடுத்த சில ஆண்டுகளுக்கு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்திற்காகப் பல தசாப்த கால நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றுவதே எமது முதன்மை இலக்காகும் என்றார்.