வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சி ! – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ள அரசாங்கம், தனது இயலாமையை மறைத்து ஆட்சியை வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் இன்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் என்பவற்றைக் கட்டுப்படுத்த இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முற்படுகிறது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம் என்ற போர்வையில், நிறைவேற்று அதிகாரத்திற்குப் பாரிய அதிகாரங்களை வழங்கி, மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக நாட்டில் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளது. துறைமுக இறக்குமதி விலையில் எரிபொருள் தருவதாகவும் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகவும் கூறிய நிலையில், இன்று பல மாவட்டங்களில் எரிபொருள் வரிசைகள் மீண்டும் உருவாகியுள்ளன.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசாங்கம் 120 ரூபாவையே நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் கிலோவுக்கு 17 ரூபா நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். பாண் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காவி உடை விவகாரத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தூரநோக்கின்றிச் செயற்பட்டு பௌத்த மதத்துக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமையைப் பாதுகாப்பதுடன், ஏனைய மதங்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.













