பன்னிபிட்டிய மற்றும் பலப்பிட்டிய பகுதிகளில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!



மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு மற்றும் காலி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறான சோதனைகளின் போது 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவ - பன்னிபிட்டிய பகுதி

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டிய பகுதியில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 553 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்

அம்பலாங்கொட - பலப்பிட்டிய பகுதி

அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி உப பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 122 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபராவார்.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.