
விவசாயியின் மகனிடம் நாட்டின் பொறுப்பை கொடுத்துவிட்டு, இன்று முழு விவசாய சமூகமும் முழுதாக நிர்கதியடைந்திருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் விவசாயிகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சமூக இணக்கப்பாடுகளும் புரிதல்களும் இன்று மீறப்பட்டுள்ளன. பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தனது விவசாயப் பிரகடனங்களை முன்வைத்தது. இருந்தபோதிலும், பெரும்பாலான விவசாயிகள் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த விவசாயிகளின் நலன்சார்ந்த வேலைத்திட்டத்தை நிராகரித்தனர். தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையுமே தெரிவு செய்தனர். எனினும் இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை இன்று மீறிவிட்டனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தெஹியத்தகண்டி சந்தைத் தொகுதிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற விவசாயிகள் சந்திப்பில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நமது நாட்டில் இரண்டு போகங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும் போகத்தில் 20 இலட்சம் ஏக்கர்களும், சிறு போகத்தில் 12,50,000 ஏக்கர்களும் (ஹெக்டேயர் அடிப்படையில் பெரும் போகத்தில் 8 இலட்சமாகவும் சிறு போகத்தில் 5 இலட்சமாகவும்) செய்கை பண்ணப்படுகின்றன. அன்னளவாக பெரும் போகத்தில் 3 மில்லியன் மெற்றிக் தொன்னும், சிறு போகத்தில் 2 மில்லியன் மெற்றிக் தொன்னும் நெல் அறுவடை செய்யப்படுகின்றன. நமது நாட்டின் நெல் அறுவடை இரண்டு போகங்களையும் சேர்த்து 5 மில்லியன் மெற்றிக் தொன்னையும் தாண்டி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று விவசாய உபகரணங்களுக்கும் VAT வரி விதிக்கப்படுகிறது
செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், பணத்திற்காக தமது நகைகளை அடகு வைத்து, அதிக வட்டிக்கு கடன் பெற்று, மிகுந்த சிரமத்துடன் காணிகளை அடகு வைத்து கையில் கிடைக்கும் சொற்ப பணத்தைப் பயன்படுத்தி விதை நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர். தற்போது இந்த போகத்தில் விதைத் நெல்லின் விலை அதிகரித்து காணப்படுகின்றன. ஹெக்டேயருக்கு 30,000 ரூபா வீதம் இரண்டு ஹெக்டேயருக்கு அதிகபட்சம் 60,000 ரூபா என்ற அளவில் சொற்பமான உர மானியம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சொற்பப் பணத்தைக் கொண்டு யூரியா உள்ளிட்ட உரங்களை வாங்க முடியுமா என்ற நடைமுறை சிக்கல் எழுகின்றது. இதை வைத்துக் கொண்டு இரண்டு உரப் பொதிகளை மட்டுமே பெற முடியும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது கிடைக்கும் திரவ உரங்கள் மற்றும் களைநாசினிகள் தரமற்றவையாக காணப்படுவதோடு, ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. எந்தவித ஒழுங்குபடுத்தலும் இங்கு காணப்பதற்கில்லை. இவற்றுக்கு மத்தியில் இன்று விவசாய உபகரணங்களுக்கும் VAT வரி விதிக்கப்பட்டு அவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று நிலையான விலை கூட சரியாக கிடைத்தபாடில்லை
இதன் காரணமாக ஒட்டுமொத்த விவசாயிகளும், நாட்டின் சாதாரண மக்களும், மத்திய வர்க்கமும், ஏழை எளிய மக்களும் முற்றிலும் நிர்கதியடைந்துபோயுள்ளனர். இன்று யானை- மனித மோதலால் யானையின் உயிரும் மனிதனின் உயிரும் பறிபோகின்றன. பயிர்ச் செய்கை அழிவுகள், சொத்துச் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இது ஒரு பேரிடராகும். இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டாலும், விவசாயிகளின் விளைச்சலுக்கு முறையான நிலையான விலைகளைக் கூட பெற்றுக் கொடுத்தபாடில்லை.
வாக்குகளுக்காகவும், ஜனாதிபதிப் பதவியைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெறுவதற்கும், வயல்வெளிகளில் நெற்கதிர்களைக் வாயில் கடித்துக் கொண்டு நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று நெல் ஒரு கிலோ 90 - 100 ரூபாவிற்குள் காணப்படுகின்றன, நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்றன அரசாங்கமே தெரிவித்தது. தற்சமயம் நாடு வகைகளுக்கு 120 ரூபா வழங்கப்பட்டால் 17 ரூபா விவசாயிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் வேளை விவசாயியை ராஜாவாக கருதிய போதிலும், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் விவசாயி கசிப்புக்காரராக மாற்றப்பட்டுள்ளார். தற்சமயம் அமைச்சர்கள் பெரும் கம்பீரத்துடன் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர். நெற்செய்கைக்குப் பதிலாக சோளப் செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர். அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் இன்று எந்தவொரு பயிருக்கும் நிலையான விலை கிடைத்தபாடில்லை. இந்நாட்டு விவசாயிகளை இந்த சர்வாதிகார அரசாங்கத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரிசி மேலதிக கையிருப்பில் காணப்படுகின்ற நிலையில், இந்த அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து வருகின்றது
விவசாயியை அழிக்கவே அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது என அன்று நாமல் கருணார்தன கூறினார். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த சமயம் அரிசியை இறக்குமதி செய்வது தரகுப் பணத்தை அடிப்பதற்கே எனக் கூறிய போதிலும், இன்று அவர்கள் அதிகாரத்திற்கு வந்து தொடர்ச்சியாக இந்த அரிசியை இறக்குமதி செய்து வருகின்றனர். உள்நாட்டில் தற்போது அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆண்டுதோறும் நமது நாட்டில் 34 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.
நமது நாட்டில் அரிசிக்கான தேவை 25 இலட்சம் மெற்றிக் தொன் ஆக காணப்படுகின்றன. 9 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மேலதிக கையிருப்பில் காணப்படுகின்றது. இந்த 9 இலட்சத்தில் 5 இலட்சம் ஏனைய உற்பத்திகள் மற்றும் கால்நடைத் தீவனங்களுக்குச் சென்றாலும் மேலும் 4 இலட்சம் மெற்றிக் தொன் மீதமிருக்க வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலை நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும்போது தற்போதைய அரசாங்கம் 340,000 மெற்றிக் தொன் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நாட்டுக்கு விவசாயத் திட்டமொன்று அவசியமாகும்
நமது நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், முறையான, பலமான, வினைத்திறனான விவசாயத் திட்டமொன்று எம்மிடம் இல்லை. ஆகையினால், நாட்டுக்கு முறையான விவசாயத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. இப்போதாவது நாட்டின் பயிர்ச் செய்கை முறை சீரமைக்கப்பட வேண்டும்.
அரிசித் தேவையில் 76% சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசிக்கும், 12% சம்பாவுக்கும் மற்றும் 12% கீரி சம்பாவுக்கும் தேவை காணப்படுகின்றன. இந்த நான்கு வகையான அரிசித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் விதமாகவே எமது நெற் செய்கை முறை காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டுக்கு தரம்கெட்ட உரங்களே கொண்டுவரப்படுகின்றன
உயர்தரமான உர வகைகளை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டுக்கு தற்சமயம் தரம்கெட்ட உரங்களே கொண்டு வரப்படுகின்றன. இவற்றுக்கு எந்தவித ஒழுங்குமுறையும் பின்பற்றப்படுவதில்லை. இதன் மூலம் இவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்களே போஷித்து வருகின்றன. இவர்கள் விவசாயியை முற்றிலுமாக நழிவடையச் செய்து, உர நிறுவனங்களும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுமே கூடிய இலாபங்களை ஈட்டி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு முறையான காப்பீட்டுத் திட்டமொன்று தேவை
அதேபோல், முறையான பயிர் காப்பீட்டுத் திட்டமொன்று நாட்டுக்குத் தேவையாக காணப்படுகின்றன. விவசாயி வருடாந்த தவணைக் கட்டணங்களைச் செலுத்தக்கூடிய, தாங்கக்கூடிய விலையிலும், அரச பங்களிப்புடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து, அறுவடைகளையும், அடகு வைத்த வீடுகளையும், சொத்துக்களையும், காணிகளையும், தங்க நகைகளையும் பாதுகாப்பதுடன், உயிர்ப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு நிலையான விலை பெற்றுக் கொடுப்பது போன்று 220 இலட்சம் மக்களுக்கும் நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுகின்றன. குடும்ப அலகுகளின் செலவுகள் வருமானங்களை விட கூடுதலாக காணப்படுகின்றன. முறையான விலை நிர்ணயக் கட்டுப்பாட்டை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் விவசாயிகளை உருவாக்க வேண்டும்
காலத்திற்கு ஏற்ப ஸ்மார்ட் விவசாயிகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். நாம் நாடாக இந்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்குத் தேவையான கொள்கை திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கெனவே வகுத்து விஞ்ஞாபனங்களில் வெளியிட்டது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.









.jpg)


