
மாலைதீவு அரசாங்கம், தொழிலுக்காக அந்நாட்டிற்கு வரும் பணியாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் விசா விதிகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம், வணிக விசா அல்லது சிறப்பு விசா மூலம் குறுகிய காலத்திற்கு மாலைதீவுக்குள் நுழையும் நபர்கள், தங்களது விசாவை தொழில் விசாவாக மாற்றி பணிபுரிவதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பை, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இடைநிறுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
வணிக விசா என்பது வணிக நடவடிக்கைகளுக்காக குறுகிய காலத்திற்கு மாலைதீவுக்குள் நுழைவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.
இருப்பினும், விசா நடைமுறையை விரைவுபடுத்தும் நோக்கில் சில வெளிநாட்டுப் பணியாளர்கள் வணிக விசாவைப் பயன்படுத்தி மாலைதீவுக்குள் நுழைந்து, பின்னர் தொழில் விசாவைப் பெற்றுப் பணிபுரியும் போக்கு காணப்படுவதாக மாலைதீவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அவதானித்துள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில் வேறு விசாவில் மாலைதீவுக்குள் நுழைந்து வேலை செய்வது சட்டவிரோதமானதாகும் என்றும், அதற்கு தொழில் விசா பெறுவது கட்டாயமாகும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












