இலங்கை – சீன உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை – இடைநிறுத்தப்பட்ட சீன அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் விரைவுபடுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!


இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவின் முக்கிய மைல்கற்களைக் கொண்டாடுவது குறித்தும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வேய் {ஹவாசியாங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் இலங்கையும் சீனாவும் தமது தூதரக உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவையும், வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின்' 75 வது ஆண்டு நிறைவையும் கோலாகலமாகக் கொண்டாடுவது தொடர்பான ஆயத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயல்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீன நிதியுதவியுடனான உள்கட்டமைப்புத் திட்டங்களை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் விரைவாகத் தொடங்கி பூர்த்தி செய்வது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக உத்தேச ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கடவத்தை - மீரிகம நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட தாமதமடைந்துள்ள பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் இருதரப்பும் கவனம் செலுத்தியுள்ளன.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் போன்ற முக்கிய உத்திசார் திட்டங்களில் சீன முதலீடுகள் பிரதான பங்கு வகிக்கின்றன. தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி வரும் நிலையில், தாமதமடைந்துள்ள அனைத்து சீனத் திட்டங்களையும் விரைவுபடுத்துவது இருநாட்டுப் பொருளாதார உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஆம் ஆண்டின் வரலாற்றுப் பொன்விழா கொண்டாட்டங்கள், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் உத்திசார் முதலீடுகளை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் இருதரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.