![]() |
முன்பள்ளிக் குழந்தைகளுக்கு பாடவாரியாகத் தனியார் வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது என முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்பள்ளிப் பருவக் குழந்தைகளுக்கு கல்விச் சுமையை ஏற்படுத்தும் வகையில் தனியார் வகுப்புகளை நடத்தக்கூடாது. புதிய முன்பள்ளிகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அண்மையில் செவனகலவில் இயங்கிய முன்பள்ளி ஒன்று மூடப்பட்டுள்ளது.
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பயிற்சிப் பட்டறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் வெளிப்புறச் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கைக் காலத்தில் பெற்றோர் விவசாயப் பணிகளுக்குச் செல்லும்போது, வீடுகளில் தனியாக விடப்படும் குழந்தைகள் ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவது கவலைக்குரியதாகும்.
இவ்விடயம் தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகளின் நலன் மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் திட்டமொன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.













