
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பௌத்த பீடங்களிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் அத்தகைய கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அமைவாகவே அரசாங்கம் எப்போதும் செயற்படும். சட்டத்திற்கு மேலாக நின்று எதனையும் மாற்றியமைக்க அரசாங்கம் விரும்பவில்லை. இருப்பினும், ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்களினால் இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள், அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்டோருடன் நாம் விசேட கலந்துரையாடலை நடத்தினோம்.
அந்தக் கலந்துரையாடலின் பிரதிபலனாகவே சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. அதற்கமைய, திருத்தப்பட்ட அந்த நிலையான உத்தரவுகளின் படியே எதிர்கால நடவடிக்கைகள் அமையும். அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கொள்கையிலேயே நாம் செயற்படுகிறோம். எனவே, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை, நீதிமன்றத்திற்கு மேலாகச் சென்று மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை.
முப்பீட மகாநாயக்க தேரர்கள் நால்வரால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், அதற்கு அடுத்த நாளே ஜனாதிபதியினால் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
முப்பீட மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நாங்கள் அவர்களின் கருத்துக்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளோம் என்றார்.








.jpg)



