
காவன்திஸ்ஸ என்ற யானை இந்த நாட்டில் இருந்ததே இல்லை என்பதுபோல்தான் அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கும் இளைஞர்களும் யுவதிகளுமே காரணமாக இருந்தனர். எனவே, இந்த இளைஞர்கள் மீண்டும் வீதியில் இறங்கினால், தற்போதைய அரசாங்கம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்து அண்மையில் உயிரிழந்த காவன்திஸ்ஸ யானைக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் நடைபெற்றது.
இதன்போது, 'விலங்குகளைக் கொன்றால் நரகத்துக்குச் செல்வீர்கள்', 'தந்தங்களைப் பெறுவதற்காகத்தான் இப்படிச் செய்தீர்களா?' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
காவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்புக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாட்டில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இளைஞர் ஒருவர் கூறுகையில்,
அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, காவன்திஸ்ஸ யானைக்காக நாட்டின் இளைஞர்கள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். காவன்திஸ்ஸ என்ற யானை இந்த நாட்டில் இருந்ததே இல்லை என்பதுபோல்தான் அரசாங்கம் செயற்படுகின்றது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கும் இளைஞர்களும் யுவதிகளுமே காரணமாக இருந்தனர். எனவே, இந்த இளைஞர்கள் மீண்டும் வீதியில் இறங்கினால், தற்போதைய அரசாங்கம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாங்கள் காவன்திஸ்ஸ யானைக்காக மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் ஏனைய யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்காகவும் குரல் கொடுக்கின்றோம்.
எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காகவோ இங்கு வரவில்லை.
எமது எதிர்காலச் சந்ததியினருக்காகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
யானைகளையும் அவற்றின் தந்தங்களையும் காணும் இறுதிச் சந்ததியினராக நாங்கள் இருக்க முடியாது. எமக்குப் பின்னரும் பல தலைமுறையினர் இருக்கின்றனர். எதிர்காலத்தில் குழந்தைகள் பிறக்கவுள்ளனர்.
அவர்களும் உயிருடன் வாழும் யானைகளையும் அவற்றின் தந்தங்களையும் நேரில் காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக, ஜனாதிபதி அவர்களே, காவன்திஸ்ஸ யானைக்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.








.jpg)



