ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனம் – அவர் தேசத்திற்காகவே சிறைத்தண்டனை அனுபவிப்பதாக சுமங்கல தேரர் தெரிவிப்பு!



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரியும் காவி உடைக்கு நீதி என்ற தொனிப்பொருளில் பௌத்த தேரர்களின் பாத யாத்திரையின் இரண்டாம் நாள்நிகழ்வு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை கடுகன்னாவையில் இருந்து மீண்டும் ஆரம்பமானது.

மகா சங்கத்தினர் 06 நாட்களுக்கு நடைபயணமாக கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (10) சனிக்கிழமை காவி உடைக்கு நீதி எனும் உறுதிமொழி எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

மிஹிந்தலை ராஜமகாவிகாரையின், விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், வண.தல்பொத்த தம்மஜோதி தேரர், வண. உலபனே சுமங்கல தேரர், வண. விதாரந்தெனியே நந்த தேரர் உள்ளிட்ட பல பிக்குமார்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, கருத்துத் தெரிவித்த வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர்,

தற்போதைய அரசாங்கத்தினால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் சம்புத்த சாசனத்தினதும் பாதுகாப்பிற்காக குரல் கொடுத்தது போல, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் அபிவிருத்திக்காகவே குரல் கொடுத்தார் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட காரியத்திற்காக அல்ல எனவும், அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசத்திற்காகவும் சாசனத்திற்குமாகவே எனவும் கூறிய சுமங்கல தேரர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனையின்றி குரல்கொடுப்பது பௌத்த பிரிவுகளின் சமூ பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார்.