கோதுமை மாவின் விலையை உயர்த்தி மக்களுக்கு மரண அடி கொடுத்துள்ளது அரசாங்கம் – சஜித் கடும் குற்றச்சாட்டு!



அரசாங்கம் கோதுமை மாவின் விலை அதிகரித்து தோட்டப்புற மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்கள் மீது மரண அடியை அடித்திருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேநேரம் நிலக்கரி மோசடியால் ஏற்பட்டுள்ள 18 பில்லியன் ரூபா நட்டத்தையும் நாட்டு மக்களே செலுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான ஆறாயிரம் மில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்றுத் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்சமயம் நாடளாவிய மின் வெட்டை முன்னெடுத்து வருகின்றது. நிலக்கரி மோசடியால் 18 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதே இதற்குரிய காரணமாகும். நுரோச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3 அலகுகளில் தலா 300 மெகாவாட் வீதம் 900 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், இன்று இந்தத் தரமற்ற நிலக்கரி காரணமாக இந்த 3 அலகுகளும் பழுதடைந்து போயுள்ளன. 61 இலட்சம் வீட்டலகுகளில் இருக்கும், 81 இலட்சம் மின்சார நுகர்வோருக்கே இன்று இந்த நட்டத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் நாட்டு மக்களுக்கு நல்லதொரு செய்தியொன்றை அரசாங்கம் கொண்டு வந்து, கோதுமை மாவின் விலையை 13 ரூபாவினால் அதிகரித்துள்ளீர்கள். இது கோதுமை மா சார்ந்த உற்பத்திகளான பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகள், தயாரிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை அதன் விலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். விலை அதிகரிப்பை மேற்கொண்டதை பார்க்கும் போது மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதை நினைத்துப் பார்க்க முடியாதிருக்கின்றன. இது தோட்டப் பகுதி மக்கள் மீது அடித்த மரண அடியாகும்.

உணவுச் செலவுகளுக்காக அதிக பணத்தைச் செலவிடும்போது, உணவு அல்லாத செலவுகளுக்கான பணம் அர்ப்பணிப்பது குறைவடைகிறது, இது பாடசாலைச் சிறுவர்களையும் நேரடியாக பாதித்து வருகின்றது. நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சி இவ்வாறு குரல் எழுப்பி வருகின்றது.

நேற்று பொல்துவ சந்திக்கு அருகில் 154,000 ஓய்வூதியதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2020 - 2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்றோர்களினது நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் என்பன துண்டிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்ற சந்தர்ப்பத்தில் கூட இந்த நிலுவைகச் சம்பளமும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஏனைய இந்த ஓய்வூதியதாரர்களின் நிலுவைச் சம்பளமும் கொடுப்பனவுகளும் வெட்டப்பட்டுள்ளன. தற்போதைய ஜனாதிபதி தேர்தல்காலத்தில் ஓய்வூதியதாரர்களின் மாநாடு ஒன்றை நடத்தி இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என்று பிரஸ்தாபித்தார். ஆனால் இன்று இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

இன்று 80,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மேலும் 16,000 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர். இவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவோம் என பெற்றுக் கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டதாரிகளுக்கு பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபிக்கப்பட்ட தொழில் வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்காக நிவாரணம் வழங்க பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், இந்தப் பணம் வங்கிகள் ஊடாகவே பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கறுப்புப் பட்டியலில் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு இந்தப் பணம் கிடைத்தபாடில்லை. 6 வகையான பேரிடர்களை எதிர்கொண்ட தொழில்முயற்சியாளர்களுக்கும், கைத்தொழில் புரிவோருக்கும் இந்தப் பணம் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

எல்லா வகையிலும் இந்த அரசாங்கம் பெற்றுத் தந்த வாக்குறுதிகளை நாளாந்தம் மீறி வருகின்றது. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு எரிபொருட்களை இன்று வரை பெற்றுத் தந்தபாடில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கே கொமிஷன் இல்லாமலே பெற்றுத் தருவோம் என்றனர். நடந்தது ஒன்றுமில்லை. 33 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் என்றனர். இன்று அதுவும் கிடைத்தபாடில்லை. இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்து வருகின்றது. IMF வுடன் புதிய இணக்கப்பாடு ஒன்றிற்குச் செல்வோம் என்று கூறினர். இதனைச் செய்தபாடுமில்லை. சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆணையும் பெற்றுக் கொடுத்தனர். இன்று இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியபாடில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றிய, மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அரசாங்கமொன்றே இன்று நாட்டில் காணப்படுகின்றது. இப்போதாவது மக்கள் மீதான அரசாங்கத்தின் கடமைகளை நிறைவேற்றி, நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் மத உரிமைகள் உள்ளிட்ட நலன்புரிச் சேவைகள் சாரந்த ஒட்டுமொத்த உரிமைகளையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்