
அண்மையில் உயிரிழந்த, இலங்கை மக்களின் மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தோடு ஒன்றிணைந்த காவந்திஸ்ஸ எனும் கம்பீர யானையின் மரணத்திற்கு நீதி வழங்குவதில் அரசாங்கத்திற்கு எவ்வித உண்மையான விருப்பமும் இல்லை என்பது தற்போது மிகத் தெளிவாக வெளிப்படையாகியுள்ளது என்று சமூக ஊடக செயற்பாட்டாளர் சசிது சாஹான் தாரக தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு இந்த விவகாரத்தில் உண்மையிலேயே நீதி வழங்கும் நோக்கம் இருந்திருந்தால், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் குறித்து ஆழமான புரிதலும் அக்கறையும் கொண்ட நிபுணர்களை ஒன்றுதிரட்டி, இந்தப் பிரச்சினையை விரிவாக விவாதித்து உரிய தீர்வைக் கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சுற்றாடல் அமைச்சர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் அலட்சியத்தையும் பொறுப்பற்ற நடத்தையையும் மறைப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகிறது. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாக இருந்தாலும், நாம் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தத் தவறுகளை நியாயப்படுத்துவதும், சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி உண்மைகளை மறைக்க முயல்வதும், நியாயத்திற்காகக் குரல் எழுப்பும் சுற்றாடல் செயற்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் அவமதித்து குற்றம் சாட்டுவதுமே அரசாங்கத்தின் ஒரே செயல்பாடாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் 'பாத்தியா' எனும் யானை உயிரிழந்தபோதும், ஜனாதிபதி செயலகத்தில் கூடிய குழுக்கள் இதேபோன்ற அலட்சியப்போக்கான பதில்களையே வழங்கியிருந்தன. கவந்தீஸ்ஸ என்பது வெறும் ஒரு விலங்கு அல்லது சாதாரண யானை மட்டுமல்ல, அது இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்துடனும், மக்களின் மத நம்பிக்கைகளுடனும் பின்னிப்பிணைந்த ஒரு தேசிய அடையாளமாகும்.
ஆனால், அந்த யானைக்குரிய மதிப்பையோ மரியாதையையோ வழங்கவோ, அதன் மரணத்திற்குச் சரியான நீதி வழங்கவோ அரசாங்கம் தயாராக இல்லை. ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய துயரம் என்னவென்றால், நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களின் நியாயமான குரலுக்குச் செவிசாய்க்காமல் இருப்பதுதான். தன் மீதான எந்தவொரு நியாயமான விமர்சனத்தையும் தனக்கெதிரான ஒரு சதி என்று சித்தரித்து, உண்மைக்குப் புறம்பான போலி சமூகக் கருத்தை உருவாக்கவே அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அரசாங்கத்தின் இந்த அலட்சியப் போக்கு தொடருமானால், குறுகிய காலத்தில் மேலும் ஒரு யானை உயிரிழந்தாலும், கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் விலங்குகள் இறக்கவில்லையா?' என்ற அரசியலாக்கப்பட்ட கேள்விகளையே சமூகம் கேட்கும் அபாயம் உள்ளது. விலங்கினங்களையும் இயற்கை வளங்களையும் அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு அலட்சியப்படுத்தி புறக்கணிக்குமானால், அதன் விளைவாக ஏற்படப்போகும் இயற்கை மற்றும் சமூகப் பேரழிவுகளிலிருந்து தப்பித்து ஒளிந்துகொள்வதற்குக்கூட நமக்கு இடமில்லாமல் போய்விடும் என்று எச்சரித்தார்












