
பௌத்த மத நிகழ்வுக்காக நாட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டின் பதில் பிரதமர் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மத குருவுக்கு மாத்திரம் அரச மரியாதை அளிப்பதன் அவசியம் என்ன, அரசாங்கம் பௌத்த மதத்துக்கும்,அதன் பாரம்பரியத்துக்கும் எதிராக செயற்படுகிறது.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய கூடாது என்பதற்காகவே கடுமையான சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் காணப்படுகின்றன. இந்த சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு மாற்றீடாக அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளதுஇ
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் மிக மோசமானதாக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். இந்த சட்டமூலத்தில் இலங்கையில் ஒருபகுதியை கோருவது குற்றமல்ல, ஆனால் பச்சைக் குத்துவதும், முடி வளர்த்துக் கொள்வதும் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பௌத்த விகாரை நிகழ்வுக்காக தாய்லாந்து நாட்டின் பதில் பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகைத் தந்தார். இவருக்கு அரசாங்கம் எவ்வித அரச மரியாதையையும் வழங்கவில்லை. அவர் சாதாரன நபர் போல நாட்டுக்கு வந்தார், அந்த மத நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
ஆனால் இந்தியாவில் இருந்து மத தலைவர் ஒருவர் வந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு உயரிய அரச மரியாதை வழங்கப்பட்டது. பௌத்த மத நிகழ்வுக்காக நாட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டின் பதில் பிரதமர் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மத குருவுக்கு மாத்திரம் அரச மரியாதை அளிப்பதன் அவசியம் என்ன, என்றார்.












