
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பௌத்த துறவிகளின் துறவற ஆடையை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், நாட்டின் பௌத்த பாரம்பரியம் மற்றும் மக்களின் மத நம்பிக்கைகளுடன் நேரடியாக மோதும் செயற்பாடாக அமைந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை என்பது சிங்கள பௌத்த கலாசாரத்தையும் நீண்ட வரலாற்று பழமையையும் மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடாகும். நாட்டின் கிராமங்கள் தோறும் விகாரைகளும், அவற்றை நிர்வகிக்கும் மகா சங்கத்தினரும் நிறைந்து வாழ்கின்றனர்.
புத்த புத்தாண்டு போன்ற தேசியப் பண்டிகைகளின் போது அனைவரும் ஒன்றிணைந்து பால் பொங்கி, ஒன்றாக உணவு உண்டு கொண்டாடும் ஒரு தனித்துவமான கலாசாரம் நம்மிடையே உள்ளது. பண்டைக்காலம் தொட்டே நாட்டின் மன்னர்கள் கூட மகா சங்கத்தினரின் வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் பெற்று ஆட்சியை நடத்தினார்கள். எனவே, அரசாங்கம் முதலில் இந்த நாட்டின் பௌத்த பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் உணர்ந்து, அதற்குத் தகுந்த கௌரவத்தை அளிக்க வேண்டும்.
மேலும், துறவற ஆடையின் மீதும், பௌத்த துறவிகள் மீதும் கை வைப்பதன் மூலம், அரசாங்கம் நாட்டின் வரலாறு, செழிப்பு, நாகரிகம் மற்றும் மக்களின் நம்பிக்கையோடு நேரடியாக மோத முயல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட பௌத்த துறவிகளுடனும், நாட்டின் பாரம்பரியத்துடனும் மோதி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அவர்கள் பின்வாங்கிய வரலாறு உண்டு.
எனவே, இத்தகைய வரலாற்று அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, துறவற ஆடை மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்.
துறவிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு தொடருமானால், அதிலிருந்து உருவாகும் மகாசங்கத்தினரின் சக்திவாய்ந்த எழுச்சி முன்னால் இந்த அரசாங்கத்தால் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் நிலைத்து நிற்க முடியாது.
வரலாற்று ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 'சங்க, வேத, குரு, கொவி, கம்கரு' (துறவிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) என்ற ஐம்பெரும் சக்திகளை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. எனவே, மகா சங்கத்தினருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்படும் இடங்களில் சுதந்திரக் கட்சி எப்போதும் முதல் ஆளாக நின்று குரல் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .
அத்துடன், ஞானசார தேரர் கைது மற்றும் பௌத்த துறவிகள் நடத்தப்படும் விதம் குறித்து நாட்டின் முதன்மை மகாநாயக தேரர்களும் தமது பலத்த அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
துறவற ஆடைக்குக் களங்கம் ஏற்படுத்தாமல், பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, உரிய முறையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுமாறு மகாநாயக தேரர்களும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தில் சரியான முறையில் தலையிட வேண்டும்.












