
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றினால் விசேட பரிசுகள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
குறித்த வங்கியினால் அவ்வாறான பரிசுகளை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் இந்தச் செய்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஏனைய முக்கியமான தகவல்களைத் திருடுவதற்காக மோசடியாளர்களால் முன்னெடுக்கப்படும் முயற்சியாக இருக்கலாம் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இத்தகைய மோசடிகளின் மூலம் பொதுமக்களின் வங்கிக் கணக்குகள் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, குறித்த செய்தியுடன் பகிரப்பட்டுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் எனவும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.












