PHP மென்பொருளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடுகள் – இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அவசர எச்சரிக்கை!


இணையத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP மென்பொருளில் அடையாளம் காணப்பட்டுள்ள தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் இணையத்தள உருவாக்குநர்களுக்கும் முக்கியமான இணையப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

CVE-2026-109618 மற்றும் CVE-2026-109619 ஆகிய குறியீடுகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், அனுமதியற்ற வகையில் கணினிக் கட்டமைப்புகளுக்குள் நுழைதல், தரவுகளைத் திருடுதல் மற்றும் கணினி முறைமைகளின் செயற்பாடுகளைச் சீர்குலைத்தல் போன்ற கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயங்களைக் குறைத்து, தமது கணினிக் கட்டமைப்புகள் மற்றும் இணையப் பயன்பாடுகளைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் உருவாக்குநர்களும் உடனடியாகத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, PHP மென்பொருளைப் பயன்படுத்தும் அனைத்து கணினிக் கட்டமைப்புகள் மற்றும் இணையப் பயன்பாடுகளையும் அடையாளம் கண்டு, அவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் PHP பதிப்புகளைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கணினிக் கட்டமைப்புகள் மற்றும் இணையப் பயன்பாடுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைய உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, PHP இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.php.net இல் வழங்கப்பட்டுள்ள புதுப்பிப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காக கணினிப் பதிவுகளை (System Logs) பரிசோதிக்குமாறும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செய்ய முடியாத, முக்கியத்துவம் வாய்ந்த அதிக அபாயமுள்ள கணினிக் கட்டமைப்புகளுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சாத்தியமான இணையத் தாக்குதல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இணையத்தளங்கள், இணையப் பயன்பாடுகள் மற்றும் முக்கியமான தகவல்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைத் தாமதமின்றி மேற்கொள்வது, சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளைக் கண்காணிப்பது மற்றும் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதையும் இந்த எச்சரிக்கை வலியுறுத்துகிறது.