12 வயதுச் சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளைஞர் கைது!



12 வயதும் 11 மாதங்களுமான சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய – எல்ல வீதியின் தெகஹமார பகுதிக்கு அருகில் வசித்து வந்த குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது புத்தல கோனகங்கார பகுதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டிலிருந்த குறித்த சிறுமியும் அவரது காதலனும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கமைய தான் சுகவீனமுற்றிருப்பதாகவும் மருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறி தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி 06 வது கட்டை பகுதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் புத்தல மற்றும் கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.