நவம்பர் 15 முதல் மெல்பேர்னுக்கான விமான சேவைகள் அதிகரிப்பு – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!



இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பயணிகளின் அதிகரித்து வரும் கேள்வியைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் மெல்பேர்னுக்கான தனது வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்த வாராந்த விமான சேவைகள் 14ஆக அதிகரிக்கவுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதால், அவுஸ்திரேலியா இலங்கைக்கான முக்கியமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாச் சந்தையாக விளங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மூன்று விமான சேவைகளும் ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.

UL 608 என்ற விமானம் கொழும்பிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அவுஸ்திரேலிய நேரப்படி அதிகாலை 5.40 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.

மீண்டும் மெல்பேர்னிலிருந்து புறப்படும் UL 609 விமானம், அந்நாட்டு நேரப்படி காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு, இலங்கை நேரப்படி நண்பகல் 12.10 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

புதிய விமான சேவைகளுக்கு மேலதிகமாக, கொழும்பிலிருந்து அதிகாலை 12.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும் UL 604 என்ற தினசரி விமான சேவையும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

மீண்டும் மெல்பேர்னிலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்படும் UL 605 விமானம், இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

புதிய விமான அட்டவணை மூலம் சுற்றுலா, உயர்கல்வி, நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகப் பயணிக்கும் பயணிகளுக்கு அதிக இணைப்பு விமான வசதிகளையும் வசதியான பயண அனுபவத்தையும் வழங்க முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடாகப் பயணிக்கும் பயணிகள் லண்டன், சென்னை, டெல்லி மற்றும் மாலை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், கூட்டாளர் விமான நிறுவனங்களின் சேவைகள் மூலம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஏனைய நகரங்களுக்குச் செல்வதற்கான இணைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் இடைநிறுத்தப் பயண நேரத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமான அட்டவணை சரக்குப் போக்குவரத்துத் துறைக்கும் மேலதிக நன்மைகளை வழங்கும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மெல்பேர்னிலிருந்து கொழும்பு ஊடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்து நேரம் குறைவதுடன், சரக்குக் கையாளும் திறனும் மேம்படும்.

புதிய விமான சேவைகள் மூலம் தெற்காசியப் பயணிகள் இலங்கை ஊடாக மெல்பேர்னுக்குச் சிரமமின்றிப் பயணிக்கக்கூடிய வகையில் கொழும்பின் பிராந்திய விமானப் போக்குவரத்து மையத் தகுதியும் மேலும் வலுப்பெறும்.

புதிய மூன்று விமான சேவைகளுடன் அவுஸ்திரேலியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வாராந்த விமான சேவைகள் 14ஆக அதிகரிக்கின்றன. இதில் சிட்னிக்கான வாராந்த நான்கு விமான சேவைகளும் உள்ளடங்குகின்றன.