
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது சேவை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள இம்முறை வரவு செலவுத் திட்டத்தில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு உட்பட்ட சுமார் 2,400 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் தமது கடமைகளை முன்னெடுக்கும்போது இந்த அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள ஏனைய கள உத்தியோகத்தர்களின் அலுவலகக் கொடுப்பனவு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 முதல் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பாரிய பகுதிக்குப் பொறுப்பாக உள்ளதும், கள அலுவலகம் ஒன்றைப் பராமரிக்க வேண்டியதுமான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அலுவலகக் கொடுப்பனவு குறித்து வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், நாளொன்றுக்குச் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் பயணித்து தமது கடமைகளை ஆற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பயணச் செலவுக் கொடுப்பனவும் இம்முறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ள போதிலும், இதுவரை அவை கிடைக்கப்பெறாத அனைத்து அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் எதுவும் முன்மொழியப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது சேவையை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், தமக்கு நிலவும் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே துரித தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.









.jpg)


