5 மாதங்களாகக் காணாமல்போன 15 வயது சிறுமி – வனப்பகுதி குகையில் 2 மாதக் கைக்குழந்தையுடன் மீட்பு!


சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல்போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள குகையொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியும் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி காணாமல்போனமை தொடர்பில் அவரது குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, கடையொன்றிலிருந்து அதிகளவிலான அரிசி மற்றும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொள்வனவு செய்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், வனப்பகுதியில் பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த குகையொன்றில் சிறுமியையும் அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையையும் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமி மருத்துவ உதவியின்றி குகைக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியும் குழந்தையும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.