
2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, நீர்ப்பாசன திணைக்களத்தில் நாடு முழுவதும் சேவையாற்றும் 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள், தங்களது சொந்தப் பணத்தையே எரிபொருள் மற்றும் களப் பணிகளுக்காகச் செலவிட வேண்டியுள்ள துயரமான நிலையில், அவற்றுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி நேற்று (15) நள்ளிரவு முதல் 2 நாட்களுக்குச் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நீர்ப்பாசன தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் துஷார வைத்திய ரத்ன, தங்களது கோரிக்கைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை, கடந்த கால அனர்த்த காலங்களிலிருந்து முன்வைக்கப்பட்ட நான்கு பிரதான கோரிக்கைகள் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், இம்முறை வரவு செலவு திட்டத்தில் தங்களது கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கத்தினர் இன்று காலை முதல் அனைத்து அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்தும் விலகி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தலைவர் உபுல் குமார அறிவித்துள்ளார்.
இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள களப் பணிகளுக்கான கொடுப்பனவை மீள வழங்குமாறு கோரியும், இம்முறை பாதீட்டில் அது குறித்து கவனம் செலுத்தப்படாமையைக் கண்டித்தும் அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் இன்று பொல்துவ சந்தி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, இது சம்பள உயர்வு கோரும் போராட்டம் அல்லவென்றும், களப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்டுவதற்காக கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்தத் போராட்டம் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.









.jpg)


