
இலங்கை – சீன இருதரப்பு உறவுகளில் 2027ஆம் ஆண்டு இரண்டு முக்கிய மைல்கற்களைக் குறிக்கும் ஆண்டாக அமையவுள்ளது. அது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீளாய்வு செய்வதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்கும் வாய்ப்பை வழங்கு வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘The Heritage Guardian’ அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
“பட்டுப்பாதை உறவைப் போற்றி, புதிய தொடுவானங்களை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம்” (“Cherishing Our Silk Road Bond, Sailing Together towards New Horizons”) என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (27) கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, பிரதமர் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பிரசாரத் திணைக்களத்தின் பிரதி தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைசியோங் ஆகியோரின் பங்கேற்புடன் ‘The Heritage Guardian’ நிகழ்ச்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவானது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கலாசாரப் பரிமாற்றம், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட அபிலாஷைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள து.
கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது நினைவுச் சின்னங்களையும் வரலாற்றுத் தளங்களையும் பாதுகாப்பதற்கு அப்பாற்பட்டது, பல்வேறு அடையாளங்கள், விழுமியங்கள், மரபுகள் மற்றும் மக்களின் கூட்டு நினைவுகளை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பேணிப் பாதுகாப்பதையும் அது உள்ளடக்குகிறது.
இலங்கை – சீன இருதரப்பு உறவுகளில் 2027ஆம் ஆண்டு இரண்டு முக்கிய மைல்கற்களைக் குறிக்கும் ஆண்டாக அமையவுள்ளது. அவை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவும், வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 75ஆவது ஆண்டு நிறைவும் ஆகும்.
இந்த மைல்கற்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீளாய்வு செய்வதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
பாடசாலைச் சீருடைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் சீன அரசாங்கத்திற்கும் எனது பாராட்டுக்கள்.
2025 ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணத்தின்போது, ஊடகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
பகிரப்பட்ட கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் சீனா மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கானஉறுதிப்பாட்டை இலங்கை கொண்டுள்ளது.







.jpg)




