மட்டக்களப்பில் 15க்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிபட்டது!



மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரீவீஸ்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தி, பொதுமக்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வந்த குரங்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகப் பலரையும் கடித்துக் காயப்படுத்திவிட்டு, மறைந்திருந்து தப்பித்து வந்த குறித்த குரங்கு, இறுதியாகச் சின்ன உப்போடை பிரதேசத்தில் மேலும் மூன்று பேரைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய நிபுணர்கள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் குழுவினர் மட்டக்களப்பு அதிகாரிகளுடன் இணைந்து குரங்கைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதலுக்குப் பின்னர் குறித்த குரங்கு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குரங்கின் தொடர் தாக்குதல்களால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், குரங்கு பிடிபட்டதையடுத்து நிம்மதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.