தாடி வளர்த்து பொலிஸ் சீருடையில் புகைப்படம் எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது



கண்டி நகரில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடை அணிந்து, தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை (pre-wedding) எடுத்துக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி யட்டிநுவர வீதியில் முழுத் தாடியுடன் பொலிஸ் சீருடை அணிந்த ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையக பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

விசாரணைகளில், அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்தது.

இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இந்து மத சம்பிரதாயங்களுக்கு அமைய தாடி வளர்ப்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், திருமணத்திற்காக தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், புகைப்படம் எடுப்பதற்காக பொலிஸ் சீருடை அணிய அனுமதி வழங்கப்படவில்லை என கண்டி பொலிஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திணைக்கள ரீதியான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.