வழுக்கைத் தலை பிரச்சினைகளுக்குத் தீர்வு – சீனாவின் புதிய மின்சாரச் சீப்பு எலிகள் மீதான ஆய்வில் வெற்றி



முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தலை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய புதிய மின்சாரச் சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Detangle எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனம், சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள பெய்ஹாங் பல்கலைக்கழகம் மற்றும் ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3ஆம் திகதி Nature Communications அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, குறித்த சீப்பு மென்மையான மின்தூண்டுதல்களையும் சிகிச்சைக்கான மூலக்கூறுகளையும் பயன்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

இந்தச் சீப்பின் பற்களில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணிய மின்முனைகள், சீவும்போது மின்தூண்டுதல்களை உருவாக்குகின்றன. இதன்மூலம் சிகிச்சைக்கான மூலக்கூறுகள் சருமத்தின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று முடியின் வேர்களைச் சென்றடைய உதவுகின்றன.

முடி உதிர்வு ஏற்படுத்தப்பட்ட ஆய்வக எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 28 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் சுமார் 97.85 சதவீத முடிப் பரப்பு காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே காலப்பகுதியில், முடி உதிர்வுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மினாக்ஸிடில் (Minoxidil) மருந்தின் மூலம் சிகிச்சை பெற்ற எலிகளில் சுமார் 70 சதவீத முடிப் பரப்பு மாத்திரமே காணப்பட்டுள்ளது.

இதனால், புதிய தொழில்நுட்பம் வழக்கமான முடி உதிர்வு சிகிச்சைகளைவிடச் சிறந்த பலனை வழங்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்தச் சாதனம் இதுவரை எலிகள் மீது மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் முடி வளர்ச்சியை மீட்டெடுக்கும் திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மனிதர்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர், அதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால விளைவுகள் தொடர்பில் மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.