மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த மலேசியப் பெண் கைது!



மட்டக்களப்பு அம்பிளாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா பிரஜையான பெண்ணொருவருவரை நேற்று புதன்கிழமை (18) இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் மலேசிய நாட்டுப் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, சம்பவ தினமான நேற்று இரவு குறித்த வீட்டை முற்றுகையிட்ட நிலையில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் மலேசியாவில் இருந்து கடந்த 10.05.2026 வந்து குறித்த பிரதேசத்திலுள்ள தமது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில் அங்கு தவறி விழுந்து தனது வலது காலை முறித்துக் கொண்ட நிலையில் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவரது விசா காலம் கடந்த 08.09.2026 அன்று முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், அவரது உடல் நலக்குறைவு காரணமாக அவர் சரியான காலத்தில் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் அவரது விசா முடிவதை அவர் கண்டுகொள்ளாத இவ்வாறான நிலையில் இதையறிந்த சிலர் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.