மட்டக்களப்பில் விவாகரத்து வழக்கால் கைகலப்பு – மைத்துனர் மீது காரால் மோதிய சம்பவத்தில் மூவர் கைது!



மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரனுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிப் பெரும் கைகலப்பாக மாறியதுடன், மைத்துனர் மீது காரைச் செலுத்தி மோதிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - பார் வீதியைச் சேர்ந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவருக்கு எதிராக மனைவியால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று (18) மனைவி தனது சகோதரனுடனும், கணவன் தனியாகவும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மூவரும் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலிருந்து வெளியேறி காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, கணவன் தனது மைத்துனரைத் தாக்க முற்பட்டதில் இருவரும் கீழே விழுந்து புரண்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்ட போதிலும், ஆத்திரமடைந்த கணவன் தனது காரைச் செலுத்தி மைத்துனர் மீது மோதியுள்ளார். இதனையடுத்து மைத்துனர் குறித்த கார் மீது தாக்குதல் நடத்தியதில் காரும் பலத்த சேதமடைந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அங்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், கணவன், மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் கைது செய்தனர். அத்துடன், சேதமடைந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.