விண்வெளியிலிருந்து இலங்கையின் கண்கவர் தோற்றம் – புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா விண்வெளி வீரர்!



சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் கண்கவர் புகைப்படம் ஒன்றை நாசா (NASA) விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் பகிர்ந்துள்ளார். இது விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றத்தைக் காட்டுகிறது.

அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில், ஆழமான நீல நிற இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவும், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மேகக் கூட்டங்களும், இந்தியாவின் தென்முனையும் தெளிவாகத் தெரிகின்றன.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படம், இலங்கையின் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசரகால மருத்துவ நிபுணரும், அமெரிக்க விண்வெளிப் படை கர்னலுமான மேனன், 2026 ஜூலை மாதம் சோயுஸ் எம்எஸ்-29 (Soyuz MS-29) விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்.

உயிரி மருத்துவ ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம் மற்றும் விண்வெளி ஆய்வகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய எட்டு மாத காலத் திட்டத்தில், எக்ஸ்பெடிஷன் 74 மற்றும் 75 (Expeditions 74 and 75) ஆகியவற்றின் விமானப் பொறியாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலத்தில், நிலையத்தின் கண்காணிப்புப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் இயற்கைக் காட்சிகளின் புகைப்படங்களையும் மேனன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.