
சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக உறுதியளித்துப் பணம் திரட்டி, அப்பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றத் தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த இரு நிறுவனங்களினதும் மூன்று பணிப்பாளர்களில் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மற்றும் கொஹுவல பிரதேசங்களில் அமைந்துள்ள குறித்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 4 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த இரு நிறுவனங்கள் தொடர்பாக இதுவரைமத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (21) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.












