
கொடவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, குறித்த விசாரணைகளை நிறைவு செய்து அது தொடர்பான கருத்துக்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்வதாகத் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகை தவணைப் பணத்தைச் செலுத்தியமைக்கான நிதி மூலங்களை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவருக்குச் சொந்தமான சொகுசு மோட்டார் வாகனமொன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த மோட்டார் வாகனத்தின் குத்தகை தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












