அரசியலிலிருந்து விலகி 23 மாதங்கள் – மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணமில்லை - கஞ்சன விஜேசேகர


மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணமோ விருப்பமோ தமக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நவம்பர் 14ஆம் திகதி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு மாதத்தின் பின்னர் அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலிலிருந்து தனியார் நிறுவனத் துறைக்கு மாறும் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது 23 மாதங்கள் கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் பகுதி நேரமாக மேற்கொண்ட பணிகள் பின்னர் முழுநேரத் தொழிலாக மாறியுள்ளதாகவும், தற்போது அந்தப் பணியில் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலிலிருந்து விலகியதன் மூலம் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவும், உடல்நலம், பயணங்கள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், பொதுவாழ்வில் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் அரசியலிலிருந்து விலகிவிட்டேன். மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கோ அரசியல் நடவடிக்கைகளுக்கோ திரும்பும் எண்ணமோ ஆர்வமோ எனக்கு இல்லை. நான் தேர்ந்தெடுத்துள்ள பாதையில் திருப்தியுடன் இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மறைந்த தனது தந்தையின் 84ஆவது பிறந்தநாளை நினைவுகூர்ந்த கஞ்சன விஜேசேகர, அவருக்கு உருக்கமான அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.