அடுத்த 3 ஆண்டுகளில் 7,000 வைத்தியர் பணியிடங்களுக்கு அனுமதி பெற அரசாங்கம் திட்டம் – அமைச்சர் நளிந்த!



அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 7,000 வைத்தியர் பணியிடங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டியவில் அமைந்துள்ள ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய 10 மாடி பேராசிரியர் மருத்துவ விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக சுகாதாரத் துறையின் பணியாளர் தேவைகள் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பயிற்சிக் காலத்தை நிறைவு செய்த 1,472 வைத்தியர்கள் நியமனங்களுக்காகக் காத்திருப்பதாகவும், தற்போது இடம்பெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் சுமார் 2,000 வைத்தியர்களுக்கு நியமனங்கள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 3,000 தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகள் உட்பட சுமார் 25,000 வைத்தியர்கள் பணியாற்றுவதாகவும், நாட்டிலுள்ள 12 மருத்துவ பீடங்களில் சுமார் 12,000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.