பெற்றோல் இறக்குமதிச் செலவு ரூ.322, டீசல் ரூ.307 மட்டுமே – எரிபொருள் விலை குறித்து சாணக்கியன் கேள்வி!


எரிபொருள் மானியங்களுக்காக திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட பல பில்லியன் ரூபா நிதியின் முழுமையான பயன்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கின்றனவா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெருமளவிலான இலாபத்தை ஈட்டிவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு திறைசேரியினால் 4,100 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் முழுமையான பயன்களும் எரிபொருள் விலைக் குறைப்பின் ஊடாக பொதுமக்களுக்குக் கிடைத்துள்ளனவா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

இதே காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2,920 கோடி ரூபா நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

அரச நிறுவனமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கம் இலாபம் ஈட்டுவதா அல்லது மக்களுக்கு நியாயமான விலையில் எரிபொருளை வழங்குவதா என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, ஒரு லீட்டர் டீசல் 307 ரூபாவுக்கும், ஒரு லீட்டர் பெற்றோல் 322 ரூபாவுக்கும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், தற்போதைய சில்லறை விற்பனை விலைகளுக்கும் இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான வேறுபாடு மற்றும் அரசாங்கத்தின் எரிபொருள் விலைச் சூத்திரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

நிதி அமைச்சின் அரையாண்டு நிதிநிலை அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் திறைசேரியில் 6,9030 கோடி ரூபா பண இருப்பு காணப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருமளவிலான நிதி கையிருப்பில் உள்ள நிலையில், எரிபொருள் மீது மேலதிக வரிகளை விதித்து மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது ஏன்?

மேலும், ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொகை, எரிபொருள் மற்றும் மின்சார நிவாரணங்களுக்காக அரசாங்கம் மாதாந்தம் செலவிடும் நிதி ஆகியவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஒரு லீட்டர் டீசலுக்கு தற்போது வழங்கப்படும் 70 ரூபா மானியம் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னரும் தொடருமா என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒட்டோ டீசல் மற்றும் கைத்தொழில் டீசலுக்கான மானியங்களை வழங்குவதற்காக மேலும் சுமார் 4,100 கோடி ரூபாவை ஒதுக்க அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் பொதுப் பணவீக்கம் 8.3 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோருக்கு இலக்கு வைக்கப்பட்ட எரிபொருள் மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளின்போது டீசல் விலை அதிகரிப்பு விவசாய உற்பத்திச் செலவுகளை மேலும் உயர்த்தக்கூடும்.

அதேபோன்று பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு எரிபொருள் நிவாரணங்களை வழங்குவதன் மூலம் போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைத்து பொதுமக்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்க முடியும்.

இதற்கிடையில், பொதுப் போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் மரக்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கான டிஜிட்டல் முறைமை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனவே, எரிபொருள் மானியங்களுக்காக ஒதுக்கப்படும் பொதுமக்களின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் உண்மையான பயன்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதையும் அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தினார்.