நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் வெறும் 13 சதவீதத்தைப் பங்களிக்கும் டீசல் மற்றும் அனல்மின் உற்பத்திக்காக 38 சதவீத பெரும் நிதி செலவிடப்படுகிறது. அதிக செலவுமிக்க மின் உற்பத்தியைக் குறைத்து, தேசிய அளவில் அனைவரும் உடன்படக்கூடிய நிலையான ஆற்றல் கொள்கையொன்று நாட்டிற்கு உடனடியாக அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது மக்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,
மின்சாரக் கட்டணத்தைக் கணக்கிடும் போது டீசல் மற்றும் நிலக்கரியின் உண்மையான கொள்முதல் விலைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். சோபா தனவி மின் நிலையம் உற்பத்தியில் ஈடுபடாத நிலையிலும் 1.3 பில்லியன் ரூபா கொள்திறன் கட்டணம் சேர்க்கப்பட்டதன் பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பல பில்லியன் ரூபா நட்டத்திற்குப் பொறுப்பானவர்களிடமிருந்தே அத்தொகை அறவிடப்பட வேண்டுமே தவிர, அதனை நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது.
கூரை மீது சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு நியாயமான விலையை வழங்கி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும். அனல்மின் மாபியாக்களுக்கு முன்னுரிமையளிப்பதைத் தவிர்த்து, நாட்டின் 30-40 சதவீதமாக உயர்ந்துள்ள வறிய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 33 சதவீத மின் கட்டணக் குறைப்பை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றார்.













