5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதாரத் துறை எச்சரிக்கை!



மாத்தறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் எனும் லெப்டோஸ்பைரோசிஸ் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தொற்றுநோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நோய் பரவுவதற்கான அதிக அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் விவசாய நடவடிக்கைகள் என்பன இந்த நோய் பரவுவதற்குக் காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெள்ள நீர் வடிந்தோடாமல் நீண்ட காலமாகத் தேங்கி நிற்கும் இடங்கள், வயல்வெளிகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேற்று அல்லது சதுப்பு நிலப்பகுதிகளில் பணியாற்றுபவர்கள் உரிய பாதுகாப்புப் பாதணிகளை அணிவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், காய்ச்சல், உடல் வலி , கண் சிவத்தல் அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.