
நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னரான புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், 50 மருத்துவக் கியோஸ்க்கள் (Medical Kiosks / Health ATMs) வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 225 மில்லியன் இலங்கை ரூபா வரையிலான நிதியுதவியை வழங்கியுள்ளது.
கொழும்பில் 11ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற இருதரப்புச் சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த மருத்துவக் கியோஸ்க்கள் மூலம், குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லாத பகுதிகளில் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனை வசதிகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கும், பொது வைத்தியசாலைகள் மீதான நோயாளர்களின் சுமையைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னரான மீட்பு, புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












